×

தமிழ்நாட்டில் கனமழை நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்கிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 21.02 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 130.64 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.  
இரண்டு இடங்களில் அதி கனமழையும், 19 இடங்களில் மிக கன மழையும், 39 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 11.11.2021 வரை 405.12 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 260.0 மி.மீட்டரை விட 56 சதவீதம் கூடுதல் ஆகும்.

முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்: செங்குன்றத்திலிருந்து 3000 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 2151 கன அடியும், பூண்டியிலிருந்து 6000 கன அடியும், சோழவரத்திலிருந்து 2015 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 11.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 12.11.2021 நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

காற்றின் வேகம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு, மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, திவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 162 முகாம்களில், 9312 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1961 நபர்கள் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 21,02,420 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம்  200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவருடன் இணைந்து இந்த பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 1721 நபர்கள் 42 நிவாரண முகாம்களிலும்,
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1048 நபர்கள் 29 நிவாரண முகாம்களிலும்,
* கடலூர் மாவட்டத்தில், 71 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,
* நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3217 நபர்கள் 10 நிவாரண முகாம்களிலும்,
* பெரம்பலூர் மாவட்டத்தில், 72 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
* புதுக்கோட்டை மாவட்டத்தில், 380 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,
* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 98 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
* திருவள்ளூர் மாவட்டத்தில், 218 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,
* திருவண்ணாமலை மாவட்டத்தில், 299 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,
* திருவாரூர் மாவட்டத்தில், 68 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
* விழுப்புரம் மாவட்டத்தில், 2040 நபர்கள் 51 நிவாரண முகாம்களிலும்,
* அரியலூர் மாவட்டத்தில், 80 நபர்கள் 2 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்
* கடந்த 24 மணி நேரத்தில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
* 157 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.
* 1072 குடிசைகள் பகுதியாகவும், 74 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 1146 குடிசைகளும், 236 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 237 வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாலாற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப் பெருக்கின் காரணமாக பூட்டுதாக்கு அருகே குடிநீர்க் குழாய்கள் சேதமுற்றதால், வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பெறும் மேல்விஷாரம், இராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோனம் நகராட்சிகள், ஆற்காடு மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 134 குடியிருப்பு பகுதிகளுக்கும் தற்காலிகமாக குடிநீர் வழங்கல் தடைபட்டது. எனினும், மேற்சொன்ன பகுதிகளுக்கு உள்ளூர் ஆதாரம் மூலம் தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் நீரோட்டம் குறைந்தவுடன் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

* நாகப்பட்டினம் மாவட்டத்தில், 5023 ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீரை வடியச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி
*    மழை நீர் தேங்கியுள்ள 426 பகுதிகளுள், 53 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 373 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
* மழை நீரால் சூழப்பட்டுள்ள 22 சுரங்கப்பாதைகளில், 13 சுரங்கப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அவைகள் மூடப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
* சாலைகளில் விழுந்த 149 மரங்களில், 146 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 3 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1609 மருத்துவ முகாம்கள் மூலம் 59,444 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 48 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 யிசிஙி-களும், 412 இராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* 11290 புகார்கள் வரப்பெற்று, 5395 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
* 1070-ல் இதுவரை 1800 புகார்கள் பெறப்பட்டு 1044 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
*  மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுரை 926 புகார்கள் பெறப்பட்டு, 784 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்து வரும் கனமழையினைத் தொடர்ந்து, பொது மக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும்
1. பொதுமக்கள் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் பாழைடைந்த கட்டடங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மேலும், காற்றின் வேகம் காரணமாக பறந்து விழும் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் இருப்பு தகடுகள் காரணமாக காயம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
3. நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
4. அடையாள அட்டை, சான்றிதழ்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
5. வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது.  
6. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
7. டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை இருப்பு வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
8. நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
9. நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077 அல்லது தீயணைப்புத் துறை எண்.101-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
10. பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் திரு. எஸ். நகராஜன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Minister ,KKSSR ,Ramachandran , Heavy rain , minister ramachandiran , explaination
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி