கனமழையால் எம்.ஜி.ஆர் நகர் சாலையில் திடீர் பள்ளம்: வாகனம் சிக்கியது

சென்னை: கனமழைகாரணமாக  சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களான தி.நகர், நெசப்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ராயபுரம், கொளத்தூர், கொரட்டூர், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களிலும், 14 சுரங்கப் பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் மழைநீர் அகற்றியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பல்வேறு இடங்களில் விழுந்து கிடந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த பள்ளத்தை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை நெசப்பாக்கம் பகுதியில் சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ெடம்போ டிராவலர் வாகனம் பள்ளத்தில் இறங்கியது. இதையடுத்து எவ்வளவு முயன்றும் வாகனத்தை மீட்க  முடியாததால் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் வாகனத்தை மீட்டனர். மேலும் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சிமென்ட் கலவையை கொண்டு மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு அப்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டது.

சுரங்கப் பாதையில் சிக்கிய லாரி

கொருக்குப்பேட்டையில் இருந்து சரக்கு லாரி நேற்று  பேசின்பிரிட்ஜ் நோக்கி சென்றது. அப்போது சி.பி.ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் லாரி சென்றபோது மழைநீரில் சிக்கியது. தகவலறிந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்டனர்.

Related Stories: