ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வெளியிட்ட, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை  அடிப்படையாகக் கொண்டே வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:  தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்ய வேண்டுபவர்கள் https://www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.இணையதளம் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அல்லது வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெளியிட்ட பின்னரே அவரது பெயர் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவித்துள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2021 ஆண்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் வாய்ப்பை பயன்படுத்தி தேவையான திருத்தங்கள், பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்தி தேவையான திருத்தங்கள், பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

Related Stories: