×

பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணி மனிதர்கள் ஈடுபடுத்துவதை ஒழிக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில்  கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

மேலும், தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Government of Tamil Nadu , Sewer, Waste, Humans, Operation, Government of Tamil Nadu, high court
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...