×

பெட்ரோலில் கலந்து பயன்படுத்த இலக்கு கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் விலை ரூ.1.47 உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பெட்ரோலில் கலப்பதற்காக கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ.1.47 உயர்த்த, ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெயின் பெரும் பகுதி வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், ஒன்றிய அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி செல்வாகிறது. இந்த செலவை குறைப்பதற்காக, பெட்ரோலில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோலில் கலப்பதற்காக கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ.1.47 உயர்த்த. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதாரத்துக்கான அமைச்சரவை குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, லிட்டருக்கு ரூ.62.65 ஆக விற்கப்படும் இது, அடுத்த மாதம் முதல் ரூ.63.45க்கு விற்கப்படும். அதேபோல், கரும்பில் இருந்து எடுக்கப்படும் மற்ற வகை எத்தனாலான சி-ஹெவியின் விலையை லிட்டருக்கு ரூ.1.05ம், பி-ஹெவியின் விலையை ரூ.1.47ம் உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவை முறையே, லிட்டருக்கு ரூ.45.69ம், 57.61க்கும் விற்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தொடங்கும் சப்ளை ஆண்டில் இருந்து, இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் இந்த  தகவல்களை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது  தற்போது (2020-2021) 8 சதவீதமாக உள்ளது. அடுத்தாண்டில் இது 10% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025க்குள் இதை 20% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

என்னென்ன பலன்கள்...
* தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் எத்தனாலை கொள்முதல் செய்யும்.
* இந்த விலை உயர்வின் மூலம், கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் அதிகம் பயன் பெறுவார்கள்.
* மேலும், வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் அளவும் குறையும்.
* கொள்முதல் ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் தொடங்கி நவம்பரில் முடியும்.

Tags : Union Cabinet , Ethanol price hiked by Rs 1.47 per liter for sugarcane: Union Cabinet approves
× RELATED ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா...