லின்ஸ் ஓபன் டென்னிஸ் எம்மா அதிர்ச்சி தோல்வி

லின்ஸ்: ஆஸ்ட்ரியாவில் நடைபெறும் லின்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், முதல் நிலை வீராங்கனை எம்மா ரடுகானு (இங்கிலாந்து) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த டீனேஜ் வீராங்கனை ரடுகானு (18 வயது), அதன் பிறகு பங்கேற்ற தொடர்களில் ஆரம்ப கட்ட சுற்றிலேயே மண்ணைக் கவ்வி சொதப்பி வருகிறார். இந்த நிலையில், லின்ஸ் ஓபனில் முதல் நிலை வீராங்கனையாக பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அவர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் ஜின்யு வாங்குடன் (20 வயது, 106வது ரேங்க்) மோதினார்.

முதல் செட்டை 1-6 என இழந்த அவர், 2வது செட்டில் டை பிரேக்கர் வரை கடுமையாகப் போராடி 7-6 என கைப்பற்றி சமநிலை ஏற்படுத்தினார். எனினும், 3வது செட்டில் அதிரடியாக விளையாடி ரடுகானுவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஜின்யு வாங் 6-1, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய ரடுகானு பரிதாபமாக வெளியேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 36 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), வெரோனிகா குடெர்மடோவா (ரஷ்யா), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: