ஜம்முவில் 18 மாதங்களில் பணிகள் முடியும் அயோத்தியில் இடம் கிடைத்தால் பெருமாள் கோயில் கட்டப்படும்: திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: ஜம்முவில் பெருமாள் கோயில் கட்டும் பணி 18 மாதங்களில் நிறைவு பெறும் என்றும், அயோத்தியில் இடம் கிடைத்தால் பெருமாள் கோயில் கட்டப்படும் என்றும் திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரசாந்தி நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடக்கில் உள்ள கோயில்களை விரிவுப்படுத்த டெல்லி ஆலோசனைக் குழு செயல்படும். டெல்லி மற்றும் குருசேத்திரம் உட்பட பல இடங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோயில்கள் உள்ளது.

ஜம்முவில் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 18 மாதங்களில் பெருமாள் கோயில் கட்டி முடிக்கப்படும். அயோத்தியில் நிலம் ஒதுக்குமாறு ராமஜென்மபூமி கோயில் கட்டுமானக் குழுவிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுள்ளது. கோயில் கட்டுமான குழுவினர் அளிக்கும் பதிலை வைத்து அங்கு பெருமாள் கோயில் கட்டுவதா அல்லது பஜனை மண்டபம் அமைப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இயற்கை வேளாண்மையை  ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து தேவஸ்தானமே நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளது. ஏழுமலையானுக்கு படைக்கும் நெய்வேத்தியம், பக்தர்களுக்கான அன்னப் பிரசாதம் இவற்றை கொண்டே தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: