பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிரடி: அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்

புதுடெல்லி: பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான விளம்பரங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் உள்ளிட்ட துணை நிறுவனங்களை ஒன்றிணைத்து தாய் நிறுவனமாக, ‘மெட்டா நிறுவனம்’ என புதிய பெயரை சூட்டியது. மெட்டா நிறுவனம் அனைத்து நிர்வாக பொறுப்பையும் கவனித்து வருகிறது. இதுவரை விளம்பர விஷயங்களில் பேஸ்புக் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது. பயனர்கள் இணையத்தில் தேடும், அவர்கள் விரும்பும் கட்டுரைகள், தகவல்கள் அடிப்படையில் அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களை பேஸ்புக் தனது வலைப்பக்கம் மூலமாக வழங்கி வருகிறது.

அதாவது, பேஸ்புக்கில் சுகாதார விஷயங்களில் குறித்து நீங்கள் அதிகமான தகவல்களை தேடினாலோ, படித்தாலோ, அந்த துறை சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அனுப்பப்படும். இந்நிலையில், இதுபோன்ற விளம்பரங்களில் இனம், உடல் நலம், பாலியல், அரசியல் நம்பிக்கைகள், மத நடவடிக்கைகள் போன்றவற்றை உணர்வுப்பூர்வமான விஷயங்களாக வரையறுத்துள்ள மெட்டா நிறுவனம் இதுபோன்ற உணர்வுப்பூர்வ விளம்பரங்களை தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மெட்டா தனது வணிக நோக்கத்திற்கான பிளாக்கில் அறிவித்துள்ளது.

இந்த அதிரடி முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி அமலுக்கு வரும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதுபோன்ற விளம்பரங்களில் சில தவறான தகவல்களை பரப்புவதால் பயனர்கள் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மெட்டா கூறி உள்ளது. இதற்கு விளம்பதாரர் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. நேற்றே மெட்டா நிறுவனத்தின் பங்கும் ஒரு சதவீதம் சரிவை சந்தித்தது. விளம்பர வருவாய் குறைந்தாலும், உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்குவது உறுதி என மெட்டா கூறி உள்ளது.

* ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் கூகுள் மேல்முறையீடு தள்ளுபடி

கூகுள் தேடுபொறி நிறுவனம், தனக்கு வேண்டிய நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பரங்களை மட்டுமே பயனர்களுக்கு பரிந்துரைத்து முன்னுரிமை அளிப்பதாக  ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியது. விதிமுறையை மீறியதற்காக கூகுளுக்கு ஐரோப்பிய கமிஷன் ரூ.20 ஆயிரம் கோடி அபராதமும் விதித்தது. இதை தள்ளுபடி செய்யக் கோரி கூகுள் நிறுவனம், ஐரோப்பிய யூனியனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தது.

Related Stories: