×

டெல்லி மாநாட்டில் வலியுறுத்தல் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் மாறிவிடக் கூடாது

புதுடெல்லி: உலகளாவிய தீவிரவாதத்தின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாததை உறுதிபடுத்த நடவடிக்கை எடுப்பதென இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் உறுதி அளித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா மறுப்பு தெரிவித்தன. இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றன.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டு வரும் சமீபத்திய முன்னேற்றங்கள், ஆப்கான் மக்களுக்கு மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை’’ என்றார். மாநாட்டில், ஆப்கானிஸ்தானின் மண் தீவிரவாதிகளின் புகலிடமாக தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிக்கும், திட்டம் வகுக்கும் மற்றும் நிதியுதவி செய்யும் மண்ணாக மாறிவிடக்கூடாது என 8 நாடுகளும் வலியுறுத்தின.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில்  பாதுகாப்புச் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள துயரங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, குண்டுஸ், காந்தஹார் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் சமீப்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி, நேரடியான மற்றும் உறுதியான முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை ஆப்கான் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் பாதுகாப்பு ஆலோசகர்கள் வலியுறுத்தினர். நிலையான, பாதுகாப்பான, அமைதியான ஆப்கானை உறுதி செய்ய 8 நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

Tags : Delhi conference ,Afghanistan , The insistence at the Delhi conference that Afghanistan should not become a haven for extremists
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி