×

நிரம்பியது வைகை அணை: உபரிநீர் வெளியேற்றம்

ஆண்டிபட்டி: வைகை அணை நிரம்பியதையடுத்து, அணையில் இருந்து, வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்து விட்டது. இதையடுத்து இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாகவும், கால்வாய் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், நேற்று காலை 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்  ஆகிய 5 மாவட்டங்களில் வைகையாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று இரவு அணைக்கு 2,875 கனஅடி தண்ணீர் நீர்வரத்து வந்துகொண்டிருந்தது. அதில் ஆயிரம்  கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 3,457 கன அடியாக அதிகரித்தது.

இதனால் இன்று காலை முதல் அணையில் இருந்து 3 ஆயிரத்து 569 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதில் ஆற்றுப்படுகை வழியாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக கால்வாயில் இருந்து 500 கனஅடி தண்ணீரும், குடிநீருக்காக 69 கனஅடி தண்ணீரும் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Vaikai Dam , Overflowing Vaigai Dam: Surface discharge
× RELATED வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை...