×

நெல்லை முருகன் கோயில்களில் இன்று காலை அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம்

நெல்லை: நெல்லை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவில் சுப்பிரமணியர் தெய்வானைக்கு காட்சி கொடுக்கும் வைபவம் இன்று காலையில் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் மேலக்கோயிலில் கடந்த 4ம்தேதி கந்த சஷ்சடி விழா சிறப்பு வழிபாட்டுடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி தினமும் மேலக்கோயிலில் யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்று வந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி சுப்பிரமணியர் சூரனை வதம் செய்யும்  சூரசம்ஹாரம் கோயில் முன்பாக நேற்று நடந்தது.

இதைதொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுத்தல் வைபவமும் கோயில் உள்பகுதியில் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருகல்யாணம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆறுமுகர் சன்னதியில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று காலை கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் சுப்பிரமணியர் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், ஆறுமுகநயினார் மர சப்பரத்திலும் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்தனர்.  

இதைத்தொடர்ந்து இன்று காலை காந்திமதி அம்மன் சன்னதியில் சுவாமி சுப்பிரமணியர், ெதய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆறுமுக நயினார் சன்னதியில் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நெல்லை சந்திப்பு பாளையஞ் சாலைகுமரன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று காலை கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோயில் முன்பாக சுவாமி சுப்பிரமணியர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

இன்று காலையில் சுவாமி சுப்பிரமணியர், ெதய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம்  நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுப்பிரமணியர் தெய்வானை  திருக்கல்யாணம் நடக்கிறது. இதுபோல் நெல்லை பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் காலையில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

Tags : Swami ,Ambal ,Nellai Murugan , Swami's display to Ambal at Nellai Murugan temples this morning
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா