×

கனமழை முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வேண்டுகோள்..!

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கையினைத் தொடர்ந்து பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நாளை காலை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 09.11.2021 நாளிட்ட அறிக்கையில், 10.11.2021 அன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழையும், திருநெல்வேலி,

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று (10.11.2021) இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுட்ன் அதி கனமழையும்,
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,

சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். நாளை (11.11.2021) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மழை விபரம்
    இன்று காலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 32 மி.மீ., கடலூரில் 19.0 மி.மீ., சென்னையில் 15 மி.மீ., காஞ்சிபுரத்தில் 11 மீ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னை அணைகளின் விபரம்
* செங்குன்றம் அணையிலிருந்து (புழல்) 2,189 கன அடியும்,
* சோழவரம் நீர் தேக்கத்திலிருந்து 1,215 கன அடியும்,
* செம்பரம்பாக்கம் அணையிலிருந்து 2,151 கன அடியும்,
* பூண்டியிலிருந்து 5,430 கன அடியும், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

பெருநகர சென்னை மாநகராட்சி
* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1,800 நபர்கள் 37 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 17,80,170 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 289 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 111 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
* மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 1 சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

* சாலைகளில் விழுந்த 132 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 412 இராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* 9,128 புகார்கள் வரப்பெற்று, 4,645 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
* 1070-வில் இதுவரை 1386 புகார்கள் பெறப்பட்டு 975 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்து வரும் கனமழையினைத் தொடர்ந்து, பொது மக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும்
1.    அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
2.    நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
3.    அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய  ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4.    வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், உடைகளை உலர்த்த மின்கம்பிகளை உபயோகிக்க கூடாது.
5.    தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு அலுவலர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
6.    டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7.    நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
8.    தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
9.    நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077 தொடர்பு கொள்ள வேண்டும்.
10.    இடி மற்றும் மின்னல் ஏற்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
11.    பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் திரு. எஸ். நகராஜன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Kanamari , Minister KKSSR Ramachandran requests the public to be vigilant following the heavy rain warning ..!
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி