‘ஆப்ஸ்’ விளம்பரத்தால் சர்ச்சை; தெலுங்கு நடிகருக்கு சட்ட நோட்டீஸ்: சாலை போக்குவரத்து கழகம் அதிரடி

ஐதராபாத்: ஆப்ஸ் விளம்பரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நடித்த தெலுங்கு நடிகருக்கு, அம்மாநில சாலைப் போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலங்கானா மாநிலம் டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜூன், கடந்த சில நாட்களுக்கு முன்  ‘ராபிடோ’ ஆப்ஸ் விளம்பரத்தில், தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடித்துள்ளார். இவரது நடிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதையடுத்து தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சட்ட ரீதியான நோட்டீசை அனுப்பி உள்ளது.

அதில், ‘தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், ‘ராபிடோ’ ஆப்ஸ் பயணத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடித்துள்ளீர். இதனை தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாகம், பயணிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே, எங்கள் தரப்பில் அனுப்பப்பட்ட சட்ட நோட்டீசுக்கு, அல்லு அர்ஜூன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் கூறுகையில், ‘நடிகர்கள், பிரபலங்கள் சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தும் வகையிலான விளம்பரங்களில் நடிக்க வேண்டும். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு யூடியூப் மூலம் வருமானம் கிடைக்கிறது.

மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். எங்களது நிறுவனம் சாதாரண மக்களுக்காக சேவையாற்றி வருகிறது. பிரபலங்கள் உள்ளிட்ட நபர்கள் மக்களின் பொது போக்குவரத்துக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

Related Stories: