×

பஞ்சாப் தேர்தலுக்கு மத்தியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ திடீர் ராஜினாமா: கட்சியில் இருந்தும் விலகினார்

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி எம்எல்ஏ ரூபிந்தர் கவுர், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்து விலகினார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பதிண்டா ரூரல் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ரூபிந்தர் கவுர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரும், சங்ரூர் தொகுதி எம்பியுமான பகவந்த்  மானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானுக்கு ஆதரவு அளித்து வந்தார். ஆனால், கட்சித் தலைமை முதல்வர் வேட்பாளர் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ரூபிந்தர் கவுருக்கும், கட்சித் தலைமைக்கும் கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவியது. இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகையில், ‘ரூபிந்தர் கவுர் ராஜினாமா செய்தது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவரது செயல்பாட்டால் கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.

தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இல்லை. மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தால் தோல்விதான் ஏற்படும். அதனால், தனக்கு சீட் கிடைக்காது என்று தெரிந்து கொண்ட அவர், தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும்’ என்றனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ரூபிந்தர் கவுர், அடுத்த சில நாட்களில் மற்றொரு அரசியல் கட்சியில் சேருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை அவர் மறுத்தார். ரூபிந்தர் கவுரின் ராஜினாமாவால் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Amadami ,MLA ,Punjab election , Aam Aadmi Party MLA resigns amid Punjab elections
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்