டாக்ஸி டிரைவர் கொடுத்த தகவலால் பரபரப்பு; முகேஷ் அம்பானி வீட்டுக்கு ஆபத்து இல்லை: குஜராத்தில் இருந்து வந்த மூவர் குறித்து விசாரணை

மும்பை: டாக்ஸி டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் முகேஷ் அம்பானி வீட்டுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று போலீசார் கூறினர். மேலும், இவ்விஷயத்தில் குஜராத்தில் இருந்து வந்த மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஆண்டிலியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி,  தனது குடும்பத்தினருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தாண்டு  பிப்ரவரி 25ம் தேதி அவரது வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்ட  மர்ம கார் கண்டறியப்பட்டது. முகேஷ் அம்பானியின் குடும்பத்தை அச்சுறுத்தும்  வகையில் அந்த கார் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பாக  மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஜே உள்ளிட்டோர் கைது  செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு டாக்ஸி டிரைவர் ஒருவரிடம் இருந்து அவசர போன் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய டிரைவர், ‘அம்பானி வசிக்கும் வீடு எங்கு உள்ளது? என்று கேட்டனர். என்னிடம் விசாரித்த இருவரில் ஒருவர் தாடி வைத்திருந்தார். மற்றொருவர் அம்பானி வீட்டின் இருப்பிடம் குறித்து கேட்டார். இருவரிடமும் ஒரு பை இருந்தது’ என்று கூறினார்.

அதையடுத்து, மூத்த போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு, அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில் டாக்ஸி டிரைவரிடம் அம்பானியின் வீடு இருக்கும் இடத்தை கேட்ட இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த மூன்று பேர் மும்பை வந்தனர். அவர்கள் இந்தியாவின் நுழைவாயில் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர்.

மற்ற இடங்களையும் பார்ப்பதற்காக முகேஷ் அம்பானி வசிக்கும் இடம் குறித்து இருவர் டிரைவரிடம் கேட்டுள்ளனர். அப்போது டாக்ஸி டிரைவர், ஆன்லைனில் தேடுமாறு அவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர், அவர்களுக்கு அம்பானி வீடு இருக்கும் வழியையும் கூறியுள்ளார். அவர்கள் அம்பானி வீட்டுப் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு குஜராத் கிளம்பிவிட்டனர். அவர்கள் குறித்த விபரமும் சேகரிக்கப்பட்டது. இவ்விஷயத்தில் டாக்ஸி டிரைவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். மற்றபடி எவ்வித ஆபத்தும் இல்லை’ என்றனர்.

Related Stories:

More