அமைச்சர் மீது 2 போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு; ஆளுநருடன் சமீர் குடும்பத்தினர் திடீர் சந்திப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

மும்பை: போதை பொருள் தடுப்பு அதிகாரி மீது மாநில அமைச்சர் அடுக்கடுக்கான புகாரை தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர் மாநில ஆளுநரை திடீரென சந்தித்தனர். இதற்கிடையே அமைச்சர் மீது 2 காவல் நிலையங்களில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான நவாப் மாலிக், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது விவகாரம் தொடர்பாக போதை பொருள் தடுப்பு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ெதாடர்ந்து கூறிவருகிறார்.

இவ்விவகாரம் தொடர்பாக சமீர் வான்கடேயின் தந்தை, அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்திலும், போலீசிலும் அவதூறு வழக்குகளையும், புகார்களையும் தொடர்ந்துள்ளார். முன்னதாக அமைச்சர் நவாப் மாலிக், சமீர் வான்கடேயின் மைத்துனிக்கு எதிராகவும் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதையடுத்து அவர் மீது புனே போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், சமீர் வான்கடேயின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓஷிவாரா போலீசார் புதியதாக மற்றொரு வழக்கை அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354 டி, 503 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின்கீழ் அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் நிஷாந்த் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீர் வான்கடேயின் தந்தை தியானேவ் வான்கடே, சகோதரி யாஸ்மின் வான்கடே, மனைவி கிராந்தி ரெட்கர்  ஆகியோர் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று திடீரென சந்தித்தனர். இதுகுறித்து சமீர் வான்கடேயின் சகோதரி யாஸ்மின் வான்கடே கூறுகையில், ‘உண்மை மற்றும் நீதிக்கான எங்களது போராட்டத்தை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர், உண்மைக்காக நாம் இன்னும் வலிமையுடன் போராட வேண்டும் என்றார்.

இறுதியில் உண்மை வெற்றி பெறும் என்று உறுதியளித்தார். எங்களது குடும்பத்தை குறிவைத்து ஊடகங்களில் கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் நவாப் மாலிக் குறித்து சில ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்பித்துள்ளோம். அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அமைச்சருக்கு எதிராக ஆளுநரை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்ததால், அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: