×

தேர்தல் களத்தில் 3 மாத குழந்தை

நன்றி குங்குமம் தோழி

சேலத்தில் 92 வயது மூதாட்டி தேர்தலில் போட்டி. உள்ளாட்சி தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை 100 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்த பத்மராஜன் என பலர் சாதனை வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர். இப்போது இந்த வரிசையில் மூன்று மாத குழந்தையும் இடம்பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிட 18 வயது ஆக வேண்டுமே இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? வாக்கெடுப்பு நடந்ததே மூன்று மாத குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்கு தான். கலி முற்றிவிட்டது என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டம், தியோரி பகுதியில் தான் விநோதமான பெயர் சூட்டும் தேர்தல் நடந்தது.

இந்த குழந்தையின் பெற்றோரான மிதுன், மான்ஸி தம்பதியருக்கு மூன்று மாதத்திற்குமுன் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டத்தான் இந்த தேர்தல்.இதற்காக யாக்‌ஷ், யுவன், யாவிக் என மூன்று பெயர்களை பெற்றோர் பரிந்துரை செய்தனர். இந்த மூன்று பெயர்களும் அவர்களுக்கு பிடித்து இருந்தது. அதில் எந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாம் என்பதில் பெற்றோர்கள் இருவரும் குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த நூதன தேர்தல். குழந்தைக்கு இந்த மூன்று பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க அந்த குழந்தையின் வீடே வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக குழந்தையை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.

நண்பர்கள், உறவினர்கள் தேர்தலில் வாக்களிக்க அழைக்கப்பட்டனர். மேலும் சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு எம்.எல்.ஏ ஆகியோரும் இந்த பெயர் சூட்டும் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் நாளில் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் காகிதங்களில் அச்சிடப்பட்டிருந்த பெயர்களில் ஒன்றில் வாக்களித்து வாக்குப்பெட்டியில் வாக்கு செலுத்தப்பட்டது. பா.ஜ.கவைச் சேர்ந்த உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவரும் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உட்பட மொத்தம் 192 பேர் எந்த பெயர் சூட்டலாம் என்று வாக்களித்தனர். இறுதியாக யுவன் என்ற பெயர் 92 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்தது. இதனால் யுவன் என்ற பெயரே அந்த குழந்தைக்கு
சூட்டப்பட்டது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : baby ,election ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…