×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூரில் நாளை கரையை கடக்கிறது; இன்று இரவு முதல் பலத்த மழை: 14ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதால், இன்றும் நாளையும் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். நாளை மாலைக்குள் கடலூரில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 14ம் தேதி அந்தமான் அருகே மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 16ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த  6ம்  தேதி இரவு முதல்  சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு 8ம் தேதி அவ்வப்போது லேசான மழை பெய்தது. பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வட தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் வெள்ள நீரில் சிக்கியவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. நேற்று மழை பெய்யாமல் இடை வெளி விட்டதால், மீட்புப் பணிகள், நீரை வெளியேற்றும் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புற நகரில்  லேசான மழை பெய்தது.  இன்று காலை 5.30 மணியளவில் கனமழை பெய்தது. அதே நேரத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதில் நாகப்பட்டினத்தில் 23 செமீ வரை மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யாமல் பொதுவான மேகமூட்டம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலைக்குள் காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று  இரவு  முதல் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரையிலும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில்  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர்கள் கருத்து:

வங்கக் கடலில் இரண்டாவதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக இன்று மாலை வலுப்பெறும். இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு கடல் பரப்பில் உள்ள ஈரப்பதம் முழுவதும் ஒன்று  திரண்டு ஒரு சுழற்சியாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடல் பகுதியில் நுழைந்துள்ளது. காற்றின் திசை வேகம் காரணமாக அது மீண்டும் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் திரும்பி மீண்டும் தமிழக கடலோரப்பகுதிக்கு இன்று மாலை 4 மணிக்கு நெருங்கி வரும். பின்னர் அது மேலும் வலுப்பெற்று இன்று இரவு 10 மணி அளவில் தமிழகத்துக்குள் நுழையும்.

 அப்போது ஆந்திர கடலோரப் பகுதியில் தொடங்கி தமிழக கடலோரப் பகுதியில் உள்ள நாகப்பட்டினம் வரை பரவியும், நீண்டும் மழை பெய்யத் தொடங்கும். குறிப்பாக இன்று இரவு 10 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், புதுச்சேரி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் இயல்புக்கு அதிகமான மழை பெய்யும். அதாவது மிக கனமழை பெய்யும். இன்று இரவு பெய்யத் தொடங்கும் அந்த மழை நாளை காலை 10 மணி வரை கொட்டித் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் நாளை காலை 11 மணிக்கு பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து திருவண்ணாமலை, தர்மபுரி, நெய்வேலி வரை பரவி மழை பெய்யும். பின்னர் அது மேற்கு நோக்கி நகர்ந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிறகு வானம் முற்றிலும் வெளிவாங்கி மேகக்கூட்டம் மட்டுமே வானில் நிலவும். 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை. இதையடுத்து, அந்தமான் அருகே 14ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகும். அது மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்போது தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்.

Tags : Cuddalore , Complaint, Phone Number, Chennai, Recovery Tasks
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!