சென்னை கே.கே.நகர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!: சிக்கிய டெம்போ லாரி..!!

சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்து வரக்கூடிய சூழலில் சென்னை கே.கே. நகர் சாலையில் திடீரென பள்ளம் தோன்றியிருக்கிறது. சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள நெசப்பாக்கத்திற்கு அருகே நேற்று மாலை 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலைக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் சம்பவத்தால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ வாகனம் பள்ளத்தில் சிக்கியது. வாகனத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது பள்ளம் மூடுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று 3 இடங்களில் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக கே.கே.நகர் பகுதியில் மழை காலங்களில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.

இதனால் மழைநீர் தேங்காத வகையில் சாலையில் உள்ள குழாய்களை பெரிதுபடுத்தும் பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த சாலையில் போக்குவரத்து ஒருவழிபாதையாக மாற்றப்பட்டு இந்த சாலையானது தற்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பயன்படாத வகையில் உள்ளது. இந்த சூழலில் தான் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கழிவுநீர் அகற்று வாரியம், குடிநீர் குழாய்கள் தொடர்ச்சியாக இப்பகுதிக்கு பல ஆண்டுகாலமாக மாற்றப்பட்டு வருகிறது. எனவே அப்பணிகளை விரைந்து முடித்து இதுபோன்ற பள்ளம் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

More