×

மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் மீண்டும் பலத்த மழை மின் கம்பியில் மரம் விழுந்து இருளில் மூழ்கிய கிராமங்கள்

மஞ்சூர்: மஞ்சூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்தது. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் 3 கிராமங்கள் இருளில் மூழ்கியது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் ஓணிகண்டி காமராஜர்நகர் பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேறோடு சாய்ந்து அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பிகளின் மீது விழுந்து சாலையின் கீழ்புறம் இருந்த பாலன் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. அப்போது பாலன் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில் வீட்டின் மேல் பகுதியில் பலத்த சத்தம் கேட்டதை தொடர்ந்து பாலன் எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் மீது மரம் விழுந்து கிடப்பதையும் மரத்தின் அடியில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறுந்து கிடந்த மின் கம்பிகளில் மின்கசிவு ஏற்படுவதை கண்டு பதறிய பாலன் அப்பகுதியை சேர்ந்த மின் ஊழியருக்கு  தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விரைந்து செயல்பட்ட அவர் ஒணிகண்டி பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துள்ளார். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அன்னமலை, காமராஜர்நகர், ஓணிகண்டி உள்ளிட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மேலும் மரம் விழுந்ததில் பாலனின் வீட்டின் மேற்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து தகவலறிந்த குந்தா தாசில்தார் மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சாலையோரம் மேலும் சில மரங்கள் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளதை காண்பித்த பொதுமக்கள் அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மிகவும் அபாயகர நிலையில் காணப்பட்ட 3 மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். வனத்துறையினர் முன்னிலையில் விழும் நிலையில் காணப்பட்ட 3 மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. அபாயகர மரங்கள் அகற்றுவது குறித்து ஆர்டிஓ நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மாற்றி மின் விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் மின்வாரியத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags : Manzoor , Manzoor, heavy rain, power line, falling tree
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த...