யமுனை நதியில் மிதந்து வரும் ரசாயன நுரை!: மோட்டார் படகு, தண்ணீரை பீய்ச்சி அடித்து நுரையை அகற்றும் டெல்லி அரசு..!!

டெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை படகுகள் மூலம் அகற்றி மூங்கில் தடுப்புகளை அமைக்க டெல்லி நீர் வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டின் சாத் பூஜை திங்களன்று தொடங்கிய நிலையில், யமுனை நதியில் ரசாயன நுரை பெருக்கெடுத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. சிலர் ரசாயன நுரை பற்றி கவலைப்படாமல் யமுனையில் நீராடி வழிபட்டனர். இந்நிலையில் யமுனை நதியில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை அகற்றக்கோரி டெல்லி அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து ரசாயன நுரையை கரையில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் டெல்லி நீர்வாரியம் ஈடுபட்டுள்ளது. மேலும் படகுகளை வேகமாக இயக்கி ரசாயன நுரையை கரையில் இருந்து நடு ஆற்றிற்கு தள்ளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நுரையை அகற்றும் பணியில் 15 மோட்டார் படகுகளை டெல்லி அரசு களமிறக்கியிருக்கிறது. நுரை கரைக்கு வராதவாறு மூங்கில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாத் பூஜை யமுனை நதி கரையில் நடைபெறாது என்று சாத் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: