×

பகல் நேரத்தில் மயிலாடுதுறை வழியாக திருச்சி - சென்னை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சேவை: மயிலாடுதுறை எம்.பி. ஒன்றிய அரசுக்கு கடிதம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திருச்சி-சென்னை எழும்பூர் இடையே புதிய தொடர் வண்டி ஒன்றை பகலில் இயக்க கோரிக்கையை ரயில்வே துறைக்கு எழுப்பி உள்ளார். தென்னக ரயில்வே துறையை பொறுத்தமட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகள் அடங்கிய டெல்டா மாவட்டங்களில் பகல் நேரங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் மட்டுமே சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த சோழன் எக்ஸ்பிரஸில் கொரோனா காலத்திற்கு பின் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இல்லை. மேலும் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன மற்றும் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளேஅதிகம். இதனால் சாமானிய பொதுமக்கள் அதிகமான கட்டணம் கொடுத்து சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நேற்று ஒரு கோரிக்கையை கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், பகல் நேரத்தில் திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரை மெயின் லைன் என்று அழைக்கக்கூடிய டெல்டா மாவட்டங்களில் பகலில் ஒரு முன்பதிவு இல்லாத தொடர்வண்டியை இயக்க வேண்டும். இன்டர்சிட்டி என்று அழைக்கப்படும் தொடர்வண்டி ஒன்றை திருச்சியில் காலையில் ஏழு மணிக்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு சென்னை எழும்பூர் அடைந்து பின்பு 1.30 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி மாலை 8 மணிக்கு திருச்சியை வந்தடையுமாறு இயக்க வேண்டும். இத்தகைய தொடர்வண்டி மூலம் டெல்டா பகுதி மக்கள் மதியம் ஒரு மணிக்கு முன்பாகவே சென்னையை அடைய முடியும். மேலும் முன்பதிவு இல்லாத தொடர்வண்டி என்ற காரணத்தால் ஏழைகளும் சாமானிய மக்களும் இந்த தொடர்வண்டியை வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த தொடர்வண்டி தொடர்பாக கோரிக்கை எழுப்பப்படும் என்று கூறி உள்ளார்.

Tags : Trichy ,Chennai ,Mayiladuthurai ,Union Government , Mayiladuthurai, Trichy - Chennai, Unreserved Express, Service
× RELATED கவுன்சிலர் பதவியை ராஜினாமாசெய்தார் அமமுக வேட்பாளர்..!!