×

உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. லக்னோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வரும் தேர்தலில் தங்களது கட்சி தனித்து போட்டியிடும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் கூறினார்.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2007ம் ஆண்டு தேர்தலில் கிடைத்ததை போல, இம்முறை தாங்கள் அறுதி பெரும்பான்மையை பெறுவோம் என்றும் மாயாவதி நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் உத்திரப்பிரதேசத்தில் மும்முரமாகத் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி அதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி வைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மாயாவதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

Tags : U. RB Bhajan Samaj Party ,Mayawati , UP, Assembly Election, Bahujan Samaj Party, Mayawati
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு