நியூசிலாந்துடன் டி20 தொடர் இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்

புதுடெல்லி: நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் மோத உள்ள இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் மூட்டை கட்டிய இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா தலைமை பொறுப்பேற்கிறார். கே.எல்.ராகுல் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

மொத்தம் 16 வீரர்கள் அடங்கிய அணியில், முன்னணி வீரர்கள் கோஹ்லி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர்கள் ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. புதுமுக வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளனர். யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 ஜெய்பூரில் நவ. 17ம் தேதியும், 2வது போட்டி ராஞ்சியிலும் (நவ. 19), கடைசி டி20 கொல்கத்தாவிலும் (நவ. 21) நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இந்தியா டி20 அணி: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் அய்யர், யஜ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Related Stories: