×

ஜெகதீசன் - விஜய் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது தமிழகம்

லக்னோ: சையத் முஷ்டாக் அலி டி20  கோப்பை  தொடரின் எலைட் ஏ பிரிவில், தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  பஞ்சாப் அணியை வீழ்த்தியது. லக்னோ, ஏகனா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. அந்த அணியின் ஷுப்மன் கில் 34 ரன் (30பந்து, 5பவுண்டரி, குர்கீரத் சிங் ஆட்டமிழக்காமல் 43* ரன் (30பந்து, 2பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். பிரப்சிம்ரன் சிங் 18, அபிஷேக் ஷர்மா 19 ரன் எடுத்தனர்.

தமிழ்நாடு பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 2, டி.நடராஜன், ஆர்.சாய்கிஷோர் , பாபா அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஹரி நிஷாந்த் 8 ரன்,  பாபா அபராஜித் 3 ரன்னில் வெளியேற, தமிழகம் 4.5 ஓவரில் 31 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், நாராயணன் ஜெகதீசன் - கேப்டன் விஜய் ஷங்கர்  ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு105 ரன் சேர்த்தது. ஜெகதீசன் 67 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். தமிழகம் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து அபாரமாக வென்றது. விஜய் ஷங்கர் 59 ரன் (40 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஷாருக்கான் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், சித்தார்த் கவுல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

எலைட் ஏ பிரிவில் தமிழ்நாடு 5 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது (ரன்ரேட்: +0.564). மகாராஷ்டிரா அணியும் 16 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்தது (+2.277).  காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் 16ம் தேதி தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து 18ம் தேதி காலிறுதி ஆட்டங்களும், 20ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும் நடைபெற உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவ, 22ம் தேதி நடக்க உள்ளது.

Tags : Jagadeesan ,Vijay ,Tamil Nadu ,Punjab , Jagadeesan, Vijay, Punjab, Tamil Nadu
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...