உலக கோப்பை முதல் அரையிறுதியில் இன்று இங்கி. - நியூசி. மோதல்

அபுதாபி: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில்  இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அமீரகத்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்தும், 2வது பிரிவில் 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்தும் இன்று அபுதாபியில் நடக்கும் முதல் அரையிறுதியில் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் சந்தித்த இங்கிலாந்து முதல் பிரிவில்  முதல் இடத்தை பிடித்தது. 2010ல் டி20 உலக கோப்பையை முத்தமிட்ட இங்கிலாந்து, 2016 பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியை சந்தித்து 2வது இடம் பிடித்தது.

தற்போது நல்ல பார்மில் உள்ள அந்த அணி, 3வது முறையாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். ஆனாலும் கேப்டன் மார்கன், இந்த தொடரில் சதம் விளாசிய ஒரே வீரரான பட்லர்,  டேவிட் மலான், சாம் பில்லிங்ஸ், லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி  என அதிரடிக்கு பஞ்சமில்லை. அதுமட்டுமல்ல டி20 உலக கோப்பையில் இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டங்களில்  இங்கிலாந்து அணியே அதிகம் வென்றுள்ளது அந்த அணிக்கு பலம்.

மேலும் 2016ம் ஆண்டு இந்தியாவில் நடந்த  டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதியில்  நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மண்ணைக் கவ்வ வைத்தது. அதற்கு பதிலடி தரவும்,  2019 ஒருநாள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோற்றதற்கு பழித்தீர்க்கவும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முனைப்பு காட்டும். இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேற மல்லுக்கட்டுவதால் இன்றைய ஆட்டம்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

நேருக்கு நேர்...

இரு அணிகளும் 21 சர்வதேச டி20ல் மோதியுள்ளதில்  இங்கிலாந்து 13 - 7 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சரிசமனில் முடிய, சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வென்றது. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. அதிகபட்சமாக இங்கிலாந்து 241 ரன், நியூசிலாந்து 201 ரன் குவித்துள்ளன.

டி20 உலக கோப்பையில் 5 ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில்  இங்கிலாந்து 3, நியூசிலாந்து 2ல் வென்றுள்ளன. அதிகபட்சமாக இங்கிலாந்து 172 ரன், நியூசிலாந்து 164 ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக இங்கிலாந்து 142 ரன், நியூசிலாந்து 52 ரன் எடுத்துள்ளன.

Related Stories:

More