டபிள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் டாப் 8 வீராங்கனைகள் பலப்பரீட்சை: மெக்சிகோவில் இன்று தொடக்கம்

குவாதலஜாரா: உலக தரவரிசையில் முதல்  8  இடங்களில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும்  ‘டபிள்யூடிஏ’ பைனல்ஸ் டென்னிஸ் போட்டி மெக்சிகோவின் குவாதலஜாரா நகரில் இன்று  தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் முடிவு தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள  வீராங்கனைகள் மோதும்  டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி மெக்சிகோவிவில் நடக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக போட்டி நடைபெறவில்லை. நடப்பு சாம்பியனும் (2019) நம்பர் 1 வீராங்கனையுமான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) இம்முறை பங்கேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் தரவரிசையில் 2வது இடம் முதல் 9வது இடம் வரை உள்ள 8 வீராங்கனைகள் இன்று தொடங்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

அரினா சபலென்கா (பெலாரஸ்),  பார்பரா கிரெஜ்சிகோவா, கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு),   மரியா சாக்கரி (கிரீஸ்),  இகா ஸ்வியாடெக் (போலந்து), கார்பினி முகுருசா, பவுலா படோசா (ஸ்பெயின்), அனெட் கோன்டவெயிட் (எஸ்டோனியா) ஆகியோர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.  சிச்சென்-இட்சா பிரிவில்  சபலென்கா, சாக்கரி, ஸ்வியாடெக், படோசா ஆகியோரும்; தியோதிஹூகான் பிரிவில் கிரெஜ்சிகோவா, பிளிஸ்கோவா, முகுருசா, கோன்டவெயிட் ஆகியோரும் இடம்  பெற்றுள்ளனர். லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி ஆட்டம் நவ.17ம் தேதி நடக்க உள்ளது.

இரட்டையர் பிரிவிலும்: ஒற்றையர் பிரிவை  போல் இரட்டையர் பிரிவு உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் டபிள்யூடிஏ பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும்  2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட உள்ளனர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Related Stories: