×

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் மக்களிடம் அதிக பணப் புழக்கம் இருப்பதற்கான காரணம் என்ன?..கொரோனா மீது பழிபோடும் ஒன்றிய அரசு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 5 ஆண்டாகியும் இன்னமும் மக்களிடம் ரொக்க பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு கொரோனாதான் காரணம் என ஒன்றிய அரசு கூறி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கவும், மக்களிடம் ரொக்கப் பணப்புழக்கத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.500. ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், மக்கள் மத்தியில் ரொக்கப் பணப்புழக்கம் குறைந்தபாடில்லை. கருப்பு பணமும் ஒழியவில்லை. இதனால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மக்களிடம் பணப்புழக்கம் ஏன் இன்னமும் அதிகளவிலேயே இருந்து வருகிறது என்பதற்கு ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. பணத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியத்தை அது குறைத்துள்ளது.  இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கடந்த 2020ம் ஆண்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, கடந்த 2016 நவம்பர் 4ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.17.74 லட்சம் கோடியாக இருந்தது.

இது 2021 அக்டோபர் 29ம் தேதி, ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2019-20ம் நிதியாண்டில் பணப்புழக்கம் 12 சதவீதமும், 2020-21ல் 14.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழலே முக்கிய காரணம். கொரோனா பாதிப்பு சமயத்தில் பணம் அவசியத் தேவையாக இருந்ததால் மக்கள் ரொக்கமாக பணத்தை எடுத்து செலவழித்துள்ளனர். எனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததாக கருத முடியாது. பணமதிப்பிழப்பின் மூலம் பொருளாதாரத்தில் பண பரிவர்த்தனைகள் பெருமளவில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2019 முதல் 2021 நிதியாண்டிற்குள் ரூ.1.1 லட்சம் கள்ள நோட்டுகள் குறைந்துள்ளன.

இது பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட முக்கிய நன்மையாகும். இதன் மூலம் பணமதிப்பிழப்பின் நோக்கம் நிறைவேறி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அது கூறியுள்ளது.

* கடந்த 2016ல் அமல்படுத்தப்பட்ட யுபிஐ மூலமாக கடந்த அக்டோபர் மாதம் மட்டுமே ரூ.7.71 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. மொத்தம் 421 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளன.
* கடந்த 10 ஆண்டுகளாக பணப்புழக்கம் அதிகரிப்பு ஆண்டுதோறும் 11-12 சதவீதமாக இருந்து வந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2016-17ம் நிதியாண்டில் பணப்புழக்கம் முந்தைய ஆண்டை விட 20% குறைந்தது. ஆனால், 2017-18ல் 39% அதிகரித்தது. 2018-19 மற்றும் 2020-21ல் இது சராசரியாக 15 சதவீதமாக இருந்து வருகிறது.

Tags : U.S. government , Depreciation, action, high cash flow, Corona, United States
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...