×

தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடியில் அதிமுக ஆட்சியில் கட்டிய தடுப்பணை மீண்டும் உடைந்தது: வீணாக கடலில் பாய்கிறது தண்ணீர்

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே தளவானூரில், தென்பெண்ணை ஆற்றில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை 2வது முறையாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அதிமுக அரசால் ரூ.25 கோடியே 35 லட்சம் செலவில் கட்டிய தடுப்பணை கடந்த 2020 அக்டோபர் 19ம் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு 4 மாதங்களிலேயே கடந்த ஜனவரி 23ம் தேதி வலதுபுற மதகு உடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இது 2 மாவட்ட விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இது தொடர்பாக அப்போது மண்டல தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. மேலும், அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு தடுப்பணை  உடனடியாக சீரமைக்க கோப்புகள் அனுப்பிவைத்ததாக தெரிவித்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது திமுக தலைமையிலான அரசு தடுப்பணையை சீரமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறையினர் நேரில் ஆய்வு செய்து ரூ.15 கோடிக்கு திட்டமதிப்பீடு அனுப்பிவைத்துள்ளனர். அதற்குள் மழைக்காலம் துவங்கி ஆற்றில் வெள்ளம் செல்வதால் இந்த தடுப்பணை சீரமைப்பு பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே, விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இடதுபுற மதகு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. மதகுகளும் அந்தரத்தில் தொங்கியவாறு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கட்டிய தடுப்பணை மூன்று மாதத்தில் வலதுபுறம் உடைந்த நிலையில், அடுத்த மழைக்கு இடதுபுறமும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தரமற்ற முறையில் அணையை கட்டியதால் தாக்குபிடிக்க முடியாமல் வெள்ளத்தில் அடித்துச்செல்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது, அணை உடைப்பினால் மழைநீரை தேக்கிவைக்க முடியாமல் வெளியேறி வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காரணமானவர்கள் தப்ப முடியாது அமைச்சர் பொன்முடி உறுதி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, ஆட்சியர் மோகன் உள்ளிட்டவர்கள் நேற்று அந்த தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், 20 ஆண்டு பழைமை வாய்ந்த கட்டிடங்கள் எல்லாம் இன்னும் உறுதியாக உள்ள சூழ்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக உடைந்துள்ளது, அதிமுக ஆட்சியின் லட்சணத்துக்கு சிறந்த உதாரணம். தரமற்ற கட்டுமானத்துக்கு காரணமானவர்கள் தப்ப முடியாது. விரைவில் இந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

Tags : Southern River, AIADMK rule, dam
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...