‘வைடா எடுக்கனும்... கூட்டம் வேணாம்... இதோட கட் பண்ணு...’ சென்னை வெள்ளத்தை ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

சென்னை: சென்னையில் நடந்து செல்லும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் படகில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவது போன்று படகுடன் சென்ற பாஜ தலைவர் அண்ணாமலை நடத்திய ஷூட்டிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பத்தாண்டு அதிமுக ஆட்சியின் முறைகேட்டுக்கு தற்போது பெய்து வரும் மழையை சாட்சி என்று சொல்லலாம். முதல் நாள் பெய்த மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளித்தது. மக்கள் வீட்டை விட்டே வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தண்ணீர் எங்கும் வடியாத நிலை தான் காணப்பட்டது. 10 ஆண்டாக அதிமுக ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்று தற்போது சென்னைவாசிகள் குமுறிவருகின்றனர். மழையால் சூழ்ந்துள்ள பகுதிகளை அனைத்து அரசியல் கட்சியினரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். கொஞ்சம் தேங்கியுள்ள தண்ணீரில், அதாவது எளிதில் மக்கள் நடந்து செல்ல முடியும் என்று நிலையில் உள்ள இடத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது போல வீடியோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த வீடியோவை அவருடன் சென்ற ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில், பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் படகில் உட்கார்ந்து இருக்கின்றனர். படகை சுற்றிலும் கட்சியினர் நிற்கின்றனர்.

அவர்கள் கூடவே கையோடு கூட்டிவந்த கேமராமேன், ‘அண்ணே ஒரு போட்டோ. இவங்க எல்லாம் பின்னால் நிக்காத மாதிரி எம்ட்டியா, வைடா எடுத்திர்லாம்..’ என்று கூறுகிறார். உடனே அண்ணாமலை, ‘ராஜூ ஒரு வைடு. இதோடு கட் பண்ணு....’ என்று சினிமா ஷூட்டிங்கில் டைரக்டர் சொல்வது போல கத்துகிறார். அதோடு படகை சுற்றி நின்ற தொண்டர்களை தள்ளிப்போகச் சொல்கிறார். தொடர்ந்து மக்களிடம் குறை கேட்பது போல ஒரு ஆங்கிள் எடுக்க கேமராமேனிடம் கூறுகிறார். மக்களிடம் குறைகேட்பது போல பேசுகிறார். அது சரியாக படம்பிடிக்கப்படுகிறதா என்பதை அடிக்கடி கவனித்துக்கொள்கிறார். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. அடப்பாவிகளா, நடந்தே செல்லலாம். இந்த இடத்தில் போய் படகில் சென்று ஆறுதல் கேட்கிறீர்களே. இது ஓவராக இல்லை என்று நெட்டிசன் ஓருவர் கேட்டுள்ளார். இதுதான் இந்த ஆண்டின் சிறந்த நிவாரணப் பணி எனவும் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். எல்லா தலைவர்களும் ஆறுதல் கேட்க போனால் நீங்கள் போய் ஷுட்டிங் ஸ்பாட்டாக மாற்றி விட்டீர்களே என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே, பிரதமர் மோடி எங்கு சென்றாலும் கூடவே போட்டோ, வீடியோ குழுவை அழைத்து சென்று ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணமலையும், பிரதமர் போலவே வீடியோ, போட்டோகிராபர்களை அழைத்து சென்று அவரை மிஞ்சி விட்டாரே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பாஜ தலைவர் அண்ணமலையின் வீடியோ ஷூட் தான் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க என்ன பண்ணீங்க...

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் மூதாட்டி ஒருவரை, அண்ணாமலை அன்ட் வீடியோ டீம் நிறுத்தி வைக்கிறது. எதிர் பகுதியில் இருந்து, வேட்டியை மடித்துக்கட்டியபடி அண்ணாமலை, மூதாட்டியை நோக்கி ஸ்லோமோஷனில் நடந்து வருகிறார். எப்படி நடக்க வேண்டும், அருகில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டளைக் குரல் கேட்டபடி இருக்கிறது. மூதாட்டியை நெருங்கியவுடன், ‘என்னம்மா இது... 2015லயும் இதே மாதிரி வெள்ளம்.. 2021லயும் அதேமாதிரிதான் இருக்கு...’ என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கும்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த மூதாட்டி, ‘அதெல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன பண்ணீங்க...’ என படாரென ஒரு கேள்வியை கேட்டார். உடனே அந்த வீடியோ சடாரென முடிந்துவிடுகிறது.

Related Stories: