×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது: விசிக அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க  தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கி சிறப்பித்து வருகிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர், கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், குமரி அனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், காதர்மொகிதீன், ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவரிசையில் 2021ம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’  விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

கடந்த சில பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான ‘மாநில ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணையம் அமைத்திட வேண்டுமென்பதை’ ஏற்று அதனை வெற்றிகரமாக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். அதற்கான சட்டமொன்றை இயற்றியதுடன் அந்த ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்பாளர்களையும் உடனடியாக  நியமித்துச் சாதனை படைத்துள்ளார். அத்துடன், பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ‘பண்டிதர் அயோத்திதாசர்’ நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் மணிமண்டபம் அமைக்கப்படுமெனவும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிப்பு செய்துள்ளார். மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவையும் தனது தலைமையில் உருவாக்கியுள்ளார்.

இத்தகைய அரும்பணிகளைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான (2021) ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பாராட்டி அவருக்கு ‘பெரியார் ஒளி’ விருது, காமராசர் கதிர் - நெல்லை கண்ணன், அயோத்திதாசர் ஆதவன்- குடியரசு கட்சி தலைவர்  பி.வி.கரியமால், காயிதேமில்லத் பிறை- அல்ஹாஜ் மு.பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு - செம்மொழி க.ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Vizika , Chief Minister, MK Stalin, Ambedkar Flame Award, Vizika
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...