×

வெள்ள நீர் விரைவாக அகற்றப்பட்டு வருவதால் நிறுத்தப்பட்ட மின்சாரம் மீண்டும் விநியோகம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: சென்னையில் வெள்ள நீர் விரைவாக அகற்றப்பட்டுள்ள பகுதிகளில், மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது, என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகர் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மழைநீர் சூழ்ந்த மற்றும் மழையால் பாதித்த இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியுடன் சென்று 2வது நாளாக நேற்று ஆய்வு செய்தார்.

புளியந்தோப்பு அருகே உள்ள குக்ஸ் ரோடு துணை மின் நிலையம், கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் துணை மின் நிலையத்தை ஆய்வு செய்தார். துணை மின் நிலைய வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்திருந்தாலும் நடந்து சென்று அங்கிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் குறித்த விவரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் மின்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு துணை மின் நிலையமும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

206 மின் மாற்றிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 95 மின்மாற்றிகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் 12,200 மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 4,680 மின் இணைப்புதாரர்களுக்கு மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இன்று (நேற்று) மாலைக்குள் மழைநீர் அகற்றப்பட்ட பின் மின் இணைப்பு வழங்கப்படும். நேற்று முன்தினம் பெறப்பட்ட 2,419 புகார்களில் 606 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் உள்ள துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகள் அடுத்த ஓண்டிற்குள் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Senthilpalaji , Flood Water, Electricity, Minister Senthilpalaji
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...