×

வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் 20 செ.மீ. மேல் மழை பெய்யும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: ‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சில இடங்களில் இன்றும், நாளையும் 20 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை, எழிலகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மேலடுக்கு சுழற்சியாக காரணமாகத்தான் இப்போது வரை மழை பெய்து கொண்டு இருக்கிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.

 இதனால், தமிழகத்தில் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் மேலாக மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே இன்றும், நாளையும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கூடுதலாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் தடுப்பு சுவர் சேதமுற்றது. இதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

6 மாவட்டங்களில் மிக கனமழை
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில்,  38 மாவட்டங்களிலும் பெய்த மழையின் சராசரி அளவு 16.84 மி.மீட்டர்.  செங்கல்பட்டில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. இயல்பான மழையளவான 248.3 மி. மீட்டரைவிட, தற்போது 362.94 மி.மீ மழை பெய்துள்ளது. இது, 46 சதவீதம் கூடுதல். செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம்,  தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை / கனமழை பதிவாகியுள்ளது.

தயார் நிலையில் விமான படை ஹெலிகாப்டர்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 43 படகுகள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலும், இந்திய கடலோர காவல் படையின் 5 டோனியர் விமானங்களும், 2 ஹெலிகாப்டர்களும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

முகாம்கள்
செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்களில், 2649 நபர்கள் 75 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க  வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில், 176  குடும்பங்களைச் சார்ந்த 800 பேர் 21 நிவாரண முகாம்களிலும், காஞ்சிபுரம்  மாவட்டத்தில், 204 குடும்பங்களை சார்ந்த 685 பேர் 23 நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு, சேதம்
தேனி, திருச்சி, மதுரை, சென்னை மாவட்டங்களில் 5 பேர்  உயிரிழந்துள்னர். 64 கால்நடைகள் இறந்துள்ளன. தமிழகம் முழுவதும் 538 குடிசைகள்  சேதமடைந்துள்ளன. அதேபோல, மொத்தம் 129 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தமிழக அளவில் முக்கிய எண்கள்

மாநில அவசர  கட்டுப்பாட்டு மைய எண்    1070
மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்    1077

சென்னையில் புகார் தெரிவிக்க அவசர எண்கள்

சென்னை மாநகராட்சி தொலைபேசி எண்     1913
பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்        9445869848

Tags : Northeast ,Tamil Nadu ,Minister ,K. Q. S. S. R. Ramachandran , Northeast Monsoon, Public, Tamil Nadu, Minister KKSSR Ramachandran
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...