தி.க. தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பணிகளில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இந்நிலையில், திக தலைவர் கி.வீரமணி (88) கொரோனா தொற்று பரவலால் வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றார். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் கோவைக்கு சென்று திரும்பினார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர் என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன’ எனவும் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

Related Stories: