பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாமல்லபுரத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். ஒருசில, இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழக்கூடும், அதிக மழை பொழிவு காரணமாக தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

இதனால், அரக்கோணத்தில் உள்ள 4வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 22 வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழு உதவி ஆய்வாளர்கள் யோகேஷ் குமார் வாமாக்கர், பிரனாயி ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள், அனைவரும் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சமுதாய நல கூடத்தில் தங்கியுள்ளனர். இது குறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு உதவி ஆய்வாளர் யோகேஷ் குமார் வாமாக்கர் கூறுகையில், ‘வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றால் தேவையான பொருட்களுடன் பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மின் கம்பத்தின் அருகில் செல்லவோ, அறுந்து கிடக்கும் மின் வயர்களை தொடவோ கூடாது. பொதுமக்கள், அவசர உதவிக்கு 044 - 2954 0444 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’ என்றார்.

Related Stories: