தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். அதனால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாகை, காரைக்கால் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதலே கனமழை பெய்தது. காரைக்காலில் அதிகபட்சமாக 20 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது.

 தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த வருட மழையின் தொடக்கத்தில் உருவான முதல்  காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக பெரு மழையுடன் சென்னையை வெள்ளக்காடாக்கி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகள் மழை நீரில் மிதக்கிறது.

இதற்கிடையேதான்,  இரண்டாவதாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்பதால் மழை மட்டுமே 20 செமீ முதல் 25 செமீ வரை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை கொண்டதால், புதுச்சேரியில் தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால், இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது. அதன்படி,  மேற்கண்ட பகுதிகளில்  நேற்று மிக கனமழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினம் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இத தவிர தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.

இந்த பகுதிகளுக்கு ஏற்கெனவே ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. இதனால் கடலோர மாவட்டங்களில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. விளை நிலங்களை பொருத்தவரையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது, அதனால் இன்று(10ம் தேதி), டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும்  பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது தவிர திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மேலும், நாளைய நிலவரப்படி (11ம் தேதி) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கடலூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும், 10 மற்றும் 11ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழைநீடிக்கும். நேற்று வரை பெய்த மழையில் அதிக பட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், செய்யூரில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. சுமார் 10 மாவட்டங்களில் 15 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சுறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். 10ம் தேதியும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் அதனால் அந்த பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கிறது. அது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கடல் பகுதியில் இருக்கின்றபோது, அது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகரக்கூடிய சூழ்நிலை இருக்கும். அந்த பகுதியில் கடலின் வெப்ப நிலை, தண்ணீர் வெளியேறுவது, உள்ளே வருவது போன்றவை அந்த காற்றழுத்த மண்டலத்தில்  எப்படி இருக்கிறது என்பதை பொருத்து தான் சொல்ல முடியும்.  அதனால்தான் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அருகில் வரும் போது அதிக கனமழை பெய்யும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத் தவிர மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்துக்கு பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இயல்பை விட 46% அதிகம்

வானிலை நிலவரங்களை கண்காணிக்கும் ரேடார்கள் செயல்பாடு குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: ரேடார்களை பொருத்தவரரையில் சென்னையில் 2, காரைக்காலில் 1, சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் 1 ரேடார் என 4 ரேடார்கள் உள்ளன. இவை அனைத்தும்  தற்போது இயங்கிக் கொண்டு இருக்கிறது. சென்னை துறைமுகத்தில் எஸ் பேண்ட் ரேடாரும்,  பள்ளிக்கரணையில் எக்ஸ் பேண்ட் ரேடாரும் உள்ளன. துறைமுகத்தில் உள்ள ரேடார் 20 வருடங்களுக்கு முன்பு  நிறுவப்பட்டது. அது தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், சில இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைந்துள்ளது. எனவே அந்த ரேடாரை தொடர்ந்து 24 மணி நேரம் இயக்க முடியாது. ஆனால் தேவை ஏற்படும் போது அவ்வப்போது அதை இயக்கிக் கொள்ள முடியும்.

அதே சமயம் பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் தொடர்ந்து இயங்கும். அதிலிருந்து தான் தற்போதைய வானிலை படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்பேண்ட் ரேடாரை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் இந்திய வானிலைத்துறை இஸ்ரோவுடன் சேர்ந்து செய்து  வருகிறது. புதிய பாகங்கள் பொருத்தப்பட்ட பிறகு தொடர்ந்து இயங்கும். தொடர்ந்து இயங்குகின்ற ரேடார்கள் தொழில் நுட்ப காரணங்களால் சில சமயங்களில் அதில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால் அவற்றை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்திய வானிலைத்துறை குறிப்பாக சென்னையில் மிகச் சிறந்த ரேடார் தொழில் நுட்ப வல்லுநர்கள் இருக்கின்றனர். இந்த  குழு அதன் கடமையை செய்து வருகிறது.

எனவே ரேடார்களின் இயக்கம் குறித்து வீண் சந்தேகங்கள் வேண்டாம். 4 ரேடார்களும் இயங்கும் நிலையில் இருக்கின்றன. 3 ரேடார்களின் படங்கள் வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் பார்க்கலாம். ரேடார்கள் மட்டும் அல்லாமல் செயற்கை கோளின் உதவியுடனும் வானிலை நிலவரங்கள் கண்காணிக்கப்படுகிறது. இது தவிர 75 காற்று மானிகள் இருக்கின்றன. அக்டோபர் 1 முதல் இதுவரை பெய்த மழை அளவைப் பொருத்தவரையில் 36 செமீ வரை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 25 செமீ. 46 சதவீதம் இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

இன்றும், நாளையும் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10ம் தேதி (இன்று) மற்றும் 11ம் தேதி (நாளை) ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து உத்தரவு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்டாவில் கன மழை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை 2.5 ெச.மீ. மழை பதிவானது. அடுத்த மூன்றரை மணி நேரத்தில் மிக கனமழை கொட்டியதில் 17.50 செ.மீ பதிவானது. இதனால் இரவு 7 மணி வரை காரைக்காலில் மட்டும் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில்  மிக கனமழை கொட்டியது. நாகையில் மாலை 5.30 மணி நிலவரப்படி 15 செ.மீ. மழை பதிவானது.

Related Stories:

More