முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்!: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிராமண பத்திரம் தாக்கல்..!!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கும் உயரத்தை 136 அடியாக குறைக்க கோரி கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை சேமிக்கலாம் என்ற மத்திய மேற்பார்வை குழு அறிக்கையை ஏற்க முடியாது என்று அந்த மனுவில் கேரள அரசு கூறியுள்ளது. நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, அதிக அளவில் நீர் சேமிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறது. மழை காலங்களில் அணையின் நீர்மட்டத்தை 136 அடி வரை குறைக்க வேண்டும் என்று கேரளா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் உள்ள பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டையம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நிலச்சரிவு மற்றும் வெள்ளம் எதிரொலியாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரளா முறையிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதை கருத்தில் கொண்டு ரூல் கேர்ப் எனப்படும் புதிய விதிகளை வகுக்க தமிழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

மழை காலங்களில் ஒவ்வொரு மாதமும் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு நீர் தேக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் ரூல் கேர்ப், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தால் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 10ம் தேதி வரை 139 அடி வரை நீரை சேமித்து வைக்கலாம் என அக்டோபர் 28ம் தேதி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது கேரளா புதிய பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: