×

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணை நீர்திறப்பு குறித்து விளக்கமளித்தார். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்தது தொடர்பாக பலர் கேள்விகளை கேட்டுக் கொண்டுள்ளனர். தண்ணீரை நீங்கள் திறந்தீர்களா? அல்லது கேரள அமைச்சர் திறந்தாரா? என்று கேட்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்த தேதியில் எவ்வளவு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மத்திய நீர்வள ஆணையம் நீர்மட்ட அளவுகளை நிர்ணயம் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதனை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு அணைக்கும் எவ்வளவு எவ்வளவு தண்ணீர் இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் 29-ஆம் தேதி தமிழக நீர்வள அலுவலர்களால் அணையின் நீர் திறக்கப்பட்டது.

கேரள மாநிலத்திற்கு நீங்கள் தகவல் சொன்னீர்களா என்றால் உரிய நடைமுறைகளின்படி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் அந்த மாநிலத்திற்குள் தான் திறந்து விடும் தண்ணீர் செல்கிறது. கேரள அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எதேச்சையாக அன்று அணையைப் பார்வையிட வந்துள்ளார்கள். கேரளத்தைச் சேர்ந்த டாக்டர். ஜோ. ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில் அணையில் தண்ணீரை தேக்குவது குறித்த நீர்மட்ட அளவுகள் விதிமுறைகள் வழங்கப்பட்டது.

அணையில் அக்டோபர் 29-ஆம் தேதி தண்ணீர் திறக்கும் பொழுது நீர்மட்டம் 138.75 அடியாக இருந்தது. அன்றைய தேதியில் விதிமுறைகளின்படி 138 அடி மட்டுமே தேக்க முடியும். 0.75 அடி விதிமுறைகளுக்கு மேல் அதிகமாக இருந்ததால் நாங்கள் அந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். ஆகவே ஏன் திறந்தோமென்றால் நீர்மட்ட அளவுகள் குறித்த விதிமுறைகள் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. ஆகவே பழமைவாதிகளுக்கு இதுபற்றித் தெரிய வாய்ப்பில்லை. ஆகையினால் நாங்கள் கேரள அமைச்சர்களை அழைத்து வந்து யாரையும் கேட்காமல் திறந்து விட்டோம் என்று குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் சட்டப்படி தான் தண்ணீரை திறந்து விட்டோம். நீர் மட்ட அளவுகள் என்பது தயார் செய்வதற்கு 30 ஆண்டுகள் ஒரு அணைக்கு எவ்வளவு நீர் எவ்வெப்பொழுது வருகிறது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பத்து பத்து நாட்களில் எவ்வளவு நீர் வருகிறது என்பதையும், மேலும் அடுத்தடுத்த பத்து நாட்களில் எவ்வளவு தண்ணீர் வரும் என்பதையும் ஒரு அளவாக எடுத்துக் கொண்டு கணக்கிடப்படுகிறது. வரும் 30-ஆம் தேதி மழைக்காலம் முடியும் பொழுது 142 அடி நீரைத் தேக்கலாம் எனக் கணக்கீடு செய்துள்ளார்கள். இந்த விதிமுறை இந்த அணைக்கு மட்டுமல்லாமல் எல்லா அணைகளுக்கும் பொருந்தும்.

கேரள மாநில வனத்துறை துணை இயக்குநர் ஏ.டி. சுனில் பாபு என்ற அலுவலர் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளருக்கு 6.11.2021 அன்று ஒரு கடிதத்தை அனுப்புகிறார். அதில் பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் பெஞ்சமின் தாமஸ் என்ற அலுவலர் இதற்கான உத்தரவை 5.11.2021-ல் வழங்கியுள்ளார். எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும் என்று 15 மரங்களின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தோம். அதற்குள் கேரள வனத்துறை அமைச்சர் இது குறித்து எங்களுக்குத் தெரியாது எனக் கூறுகிறார். மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினை அமைச்சருக்குத் தெரியாமல் ஒரு அதிகாரி பிற மாநிலத்திற்குக் கடிதம் எழுத முடியுமா? அமைச்சரின் ஒப்புதலோடு தான் அக்கடிதத்தை அனுப்பினோம் என கேரள வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கேரள நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசு அலுவலர்களும் அமைச்சரும் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இங்குள்ள சிலர் எதையெடுத்தாலும் அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுப் படியும், நீர்மட்ட அளவுகள் விதிமுறைகள் படியும் நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உள்ளது. அதன் படி வரும் 30-ஆம் தேதி 142 அடி தண்ணீர் தேக்கப்படும். இதற்குள் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? அணையில் 142 அடி முதல் 152 அடி வரை நீரை தேக்கலாம் என்ற உத்தரவை வாங்கியது எங்கள் ஆட்சியில் தான். ஆனால் எங்கள் ஆட்சியில் தான் இதைப் பெற்றோம் என்கிறார்களே, அணை மற்றும் தண்ணீர் அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்று கேரளாவில் ஒரு சட்டம் போட்டார்கள். இதை எதிர்த்து அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் எட்டு மாதமாகியும் வழக்கு எண் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நம்பர் பெறப்பட்டு அந்த வழக்கை நடத்தினோம்.

முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் செய்யவில்லை எனக் கூறுகிறார்கள். காலை முதல் மாலை வரை ஓய்வின்றி அனைத்து வெள்ளப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு, அனைத்துப் பணிகளையும் முடுக்கி விட்டு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருபவர் நமது முதலமைச்சர் மட்டுமே. கலைஞர் அவர்கள் உழைப்பு... உழைப்பு அவர் தான் ஸ்டாலின் என்று கூறியதற்கேற்ப இன்று முதலமைச்சர் ஆன பிறகும் உழைப்பு... உழைப்பு என்று உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்துக் குறை கூறுகிறார்கள். அவர் மேயராக இருந்த பொழுது தான் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலைகள், மேம்பாலங்கள், மழை நீர் வடிகால்கள் அதிக அளவு அமைக்கப்பட்டன. இன்று பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் விரைந்து வெளியேறுகின்றன. இவருடைய காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஒன்றை மட்டும் கூறுகிறேன். இன்று இரண்டு பேர் உண்ணாவிரதம் இருப்போம் என்கிறார்கள். அதில் ஒருவர் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஸ்டாலின் காலத்தில் எதையும் செய்யவில்லை என்று கேவலப்படுத்திப் பேசுகிறார். இன்று செல்லுமிடமெல்லாம் நமது தளபதி ஸ்டாலின் அவர்களின் சேவையைப் பாராட்டி, நன்றி தெரிவித்து மக்கள் கைகூப்பி வணங்குகின்றனர். இது நீண்டகால அரசியலில் இருப்பவர்களுக்குத் தெரியும். இடைக்காலத்தில் அரசியலுக்கு வந்தவர்களுக்கெல்லாம் இது தெரியாது.
ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 14 முறை அணையைப் பார்வையிட்டதாகக் கூறுகிறார். எந்தெந்த தேதியில் சென்றீர்கள் எனக் கேட்டால் தெரியவில்லை என்கிறார். ஏதோ ஒரு புகைப்படத்தைக் காண்பித்து அணையைப் பார்வையிட்டதாகக் கூறுகிறார். இது நம்பும் அளவிற்கு இல்லை. பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஒவ்வொரு நாளும் யார் யார் வந்தார்கள், என்ன நிகழ்வு நடைபெற்றது என்பதையெல்லாம் பதிவேட்டில் நாள்தோறும் பதிவு செய்வது வழக்கம். ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக விளம்பரத்திற்காக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் 35 அடி கொள்ளளவில் 33.58 அடியும், புழல் ஏரியில் 21.20 அடி கொள்ளளவில் 19.04 அடியும், சோழவரம் ஏரியில் 18.86 அடி கொள்ளளவில் 17.74 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடி கொள்ளளவில் 20.91 அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 36.61 அடி கொள்ளளவில் 36.61 அடியும் நீர்த் தேக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 120 அடியை நெருங்கியுள்ளதால் இன்று காலை முதல் உபரி நீர்த்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பைக் கருதி நீர்வரத்திற்கேற்ப உபரி நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இச்செய்தியாளர் சந்திப்பின் பொழுது நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Mullaperiyar Dam ,Supreme Court ,Minister ,Duraimurugan , durai murugan
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...