×

ராமநாதபுரத்தில் உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது யூரியா அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 15நாட்களுக்கும் மேலாக கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் தனியார் உரக்கடைகளிலும் யூரியா, டிஏபி உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அழைக்கின்றனர். இதையடுத்து முதுகுளத்தூரில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 266 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய யூரியா 500 ரூபாய்க்கும், 1300 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய டிஏபி உரம் 1700 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த அதிக விலையை கொடுத்தாலும் உரம் கிடைக்காத நிலை இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரே சமயத்தில் விவசாயிகள் உரம் வாங்க வருவதால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் புதிய உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags : Ramanathapuram , Fertilizer
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...