×

2 ஆயிரம் ஊழியர்களை கொண்டு ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்படுகிறது: மழை பெய்யாவிட்டால் மாலைக்குள் பணி முடியும் என மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் வடியாத 200 பகுதிகளில் 2 ஆயிரம் ஊழியர்களை கொண்டு ராட்சத மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யாவிட்டால் மாலைக்குள் பணி முடிவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 6ம்தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், மழைநீர் சூழ்ந்தது. சென்னையில் முக்கிய பகுதிகள் எல்லாம் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. ஆனாலும் இரவு, பகலாக மாநகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை ஒருபுறம் செய்து வருகிறது. தேங்கிய மழைநீரை வெளியேற்றும் போது மழை தொடர்ந்து பெய்வதால் இந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி துணை கமி‌ஷனர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் பருவமழை பாதிப்பால் 363 புகார்கள் வந்தன. மழைநீர் சூழ்ந்துள்ளதாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து உடனடியாக அந்தந்த பகுதிகளில் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று வரை 140 இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இன்று 20க்கு மேற்பட்ட இடங்களில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது.

இன்னும் 200 இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அந்த பகுதிகளில் 325 மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள கால்வாய்கள் நிரம்பி விட்டன. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் உள்ளது. விடிய விடிய தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. 2 ஆயிரம் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழை தொடர்ந்து பெய்து வருவதால், தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக உள்ளது. ஆனாலும் மழை பெய்யாமல் இருந்தால் இன்று மாலைக்குள் தேங்கிய நீரை வெளியேற்றி விடுவோம். ராட்சத மோட்டார்கள் மூலம் இரவு, பகலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீண்டும் தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. தி.நகர். மேட்லி சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கபாதையிலும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. மற்ற சுரங்கபாதைகளில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Rainwater is removed by a giant motor with 2 thousand employees: the corporation informs that the work can be completed by evening if it does not rain
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...