×

ஒரே ஆண்டில் 2 முறை உடைந்தது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை!: ரூ.15 கோடி செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி..!!

விழுப்புரம்: அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை மதகு மீண்டும் உடைந்தது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, 15 கோடி ரூபாய் செலவில் அணை சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் - கடலூர் மாவட்டம் எந்திரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டிய மூன்றே மாதங்களில் மதகு உடைந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மீண்டும் தளவானூர் தடுப்பணையின் மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன், தளவானூர் தடுப்பணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தளவானூர் தடுப்பணையை தரமற்ற முறையில் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விவசாயம் செழிக்கும் நோக்கத்தில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டது தளவானூர் தடுப்பணை. ஆனால் கட்டுமானம் தரமின்றி இருப்பதால் சில மாதங்களிலேயே மீண்டும் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த பொதுப்பணியின் கீழ் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை, கட்டிய ஓர் ஆண்டுக்குள் 2 முறை உடைந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


Tags : AIADMK ,Talwanur dam ,Minister ,Ponmudi ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...