×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 415 ஏரிகள் நிரம்பின-கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை

திருவண்ணாமலை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 76.40 மிமீ மழை பதிவானது. ஆரணியில் 15.50 மிமீ, செய்யாறில் 32 மிமீ, ஜமுனாமரத்தூரில் 27 மிமீ, வந்தவாசியில் 25 மிமீ, போளூரில் 32.60 மிமீ, திருவண்ணாமலையில் 10 மிமீ, தண்டராம்பட்டில் 33 மிமீ, கலசபாக்கத்தில் 15 மிமீ, சேத்துப்பட்டில் 20 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 38.20 மிமீ மழை பதிவானது.

அதனால், ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பொதுப்பணித்துறை நிர்வாகத்தின்கீழ் உள்ள 697 ஏரிகளில் 230 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், 66 ஏரிகளில் 75 சதவீதமும், 155 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.அதேேபால், ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்தின்கீழ் உள்ள 1286 ஏரிகளில் 185 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கிறது.

மேலும், 11 ஏரிகளில் 90 சதவீதமும், 95 ஏரிகளில் 80 சதவீதமும், 167 ஏரிகளில் 70 சதவீதமும், 312 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. வரும் நாட்களில் கனமழை நீடிக்கும் என்பதால் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. எனவே, நிரம்பியுள்ள ஏரிகளில் இருந்து உபரிநீரை பாதுகாப்பாக திறந்து விடவும், நிரம்பி வரும் ஏரிகளின் நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, ஏரி கரையோரம் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் அருகே குடியிருப்போரை, பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவட்டத்தில் உள்ள 4 அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளன. சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடி. ஆனால் மதகுகள் சீரமைப்பு பணி காரணமாக 99 அடி வரை மட்டுமே தேக்க முடியும். தற்போது, 97.45 அடி நிரம்பி இருக்கிறது. மேலும், அணைக்கு வினாடிக்கு 1540 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதனால், அணையில் இருந்து தென்பெண்ணை வழியாக வினாடிக்கு 1440 கன அடியும், வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக 100 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல், குப்பனந்தம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 59.04 அடி. அதில், 57.07 அடி நிரம்பியுள்ளது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 62.32 அடி. அதில், 54.32 அடி நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 128 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி முழு நீர்மட்டம் நிரப்பவில்லை. எனினும் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 37 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செய்யாறு, செங்கம் பகுதிகளில் எம்எல்ஏக்கள் ஆய்வு

செங்கம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் அகற்றுவது குறித்து எம்எல்ஏ கிரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து டவுன் தோக்கவாடி  குடியிருப்பு பகுதியில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த அறிவுறுத்தினார். ஆய்வில், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர். இதேபோல், செய்யாறு ஒன்றிய கிராமப்பகுதிகளில் மழை பாதிப்புகளை எம்.எல்.ஏ. ஜோதி ஆய்வுசெய்தார். ஆய்வின்போது செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல்பாக்கம் வி.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தி.மயில்வாகனன், ச.பாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நெற் பயிர்களில் தண்ணீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் காரணமாக செங்கம் மற்றும் வேட்டவலம் ஆகிய பகுதியில் 2 மாடுகள் இறந்துள்ளன. 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் மூழ்கியிருக்கிறது. அந்த பகுதிகளில் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags : Thiruvanalamaya district , Thiruvannamalai: The northeast monsoon has intensified in Tamil Nadu. Accordingly for the last 2 days in Thiruvannamalai district
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 545 பள்ளிகள் நாளை முதல் செயல்படும்