காரைக்குடி பகுதியில் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் அகற்றம்-தயார் நிலையில் 752 தன்னார்வலர்கள்

காரைக்குடி : தினகரன் செய்தி எதிரொலியாக காளவாய்பொட்டல் பகுதியில் குடியிருப்பை சூழ்ந்து இருந்த மழைநீரை கோட்டாசியர் பிரபாகரன் தலைமையில் வருவாய் துறையினர், நகராட்சியினர் அகற்றினர். காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியை சுற்றி மழைநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளதாக தினகரனில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கோட்டாசியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் தலைமையில் வட்டாசியர் மாணிக்கவாசகம் உள்பட வருவாய், நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்றினர். பருவமழை முன்னெற்பாடுகளை குறித்து கோட்டாசியர் பிரபாகரன் கூறுகையில், காளவாய் பொட்டல் பகுதியில் உள்ள மழைநீர் அகற்றப்பட்டு அரியக்குடி கண்மாய்க்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேதம் அடையும் வகையில் மண் சுவரால் ஆன வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் இரண்டு தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு காரைக்குடி தாலுக்காவில் மட்டும் 752 பேர் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களின் எண்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: