×

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் மழைநீரை வடியவிடும் பணி தீவிரம்-விவசாயிகளே களத்தில் இறங்கினர்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்குப் பருவமழையானது விட்டுவிட்டு பெய்துவருகிறது. சராசரியாக 30மி.மீ மழை பெய்துவருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும் தாளடியில் நடப்பட்ட இளம்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே பயிர்களைசூழ்ந்த மழைநீர் வடிந்து வந்தநிலையில் தற்பொழுது மேலும் மழை அதிகரித்துவருவதால் இதுவரை 2 ஆயிரம் எக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளது. மழை நின்ற பிறகுதான் தண்ணீர் வடிய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் நட்டு முடிக்கப்படும் என்று விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வீட்டுமனைகளில் வீடுகள் கட்டப்படாத பள்ளப்பகுதிகள் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை பொக்லைன் மூலம் வெளியேற்றும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது பட்டமங்கல ஊராட்சியில் பல நூறுகணக்கான வீடுகளும் வீட்டுமனைகளும் உள்ளன. வீடு கட்டப்படாமல் உள்ள மனைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்யதியுள்ளது. மயிலாடுதுறை பட்டமங்கல ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ள திருமுருகன் நகர் பகுதியில் காலிமனைகளில் மழைநீர் தேங்கி ஏரிபோல் காட்சியளித்து. அதனை வெளியேற்றும் பணி மும்முரமாக நடக்கிறது.

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், மகாராஜபுரம்,வேட்டங்குடி,குன்னம், மாதானம்,பழையபாளையம், கண்ணபிராண்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 5000 ஏக்கர் சம்பா நடவு மற்றும் நேரடி விதைப்பு பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதே சமயத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி இருந்தால், அழுகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடம் அருகே உள்ள கண்ணபிரண்டி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப் படாததால் அப்பகுதியில் நேரடி விதைப்பு செய்த 500 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் எளிதில் வெளியேற முடியாமல் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் தற்காலிகமாக கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து நேற்று கண்ணபிரானண்டி வடிகால் வாய்க்காலை சொந்த முயற்சியால் தூர்வாரினர்.

தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை

விவசாயத்துறை அதிகாரி சங்கரநாராயாணன், தெரிவிக்கையில், விவசாயத் துறையினரை கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் மழைசேதம் குறித்து விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றப்படும், தூர்வாராததால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால், தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இதுவரை 2 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விவசாயத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு வேறு எந்த தகவல் மற்றும் தேவைகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சங்கரநாராயணன் செல்.எண். 90809 17155ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறையினர் கூறுகையில். இதுவரை ஆறு, வாய்க்கால் போன்ற பகுதிகளில் கரை மட்டத்திற்குத் தண்ணீர் செல்வதால் எந்தவித ஆபத்தும் இல்லை, கரைவழிந்து தண்ணீர் வயல் மற்றும் ஊருக்குள் உட்புகாமல் இருக்க பொதுப்பணித்துறை அலுவலர்களும் ஊழியர்களும் தேவையான சாக்குமூடைகளில் மணலுடன் காத்திருக்கின்றனர் என்றார்.

Tags : Mayiladu district , Mayiladuthurai: The northeast monsoon has been lashing the Mayiladuthurai district for the last 10 days. 30 mm on average
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...