×

டெல்டாவில் மீண்டும் கொட்டி தீர்த்த கனமழை பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது-கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

திருச்சி : டெல்டாவில் மீண்டும் கனமழை பெய்ததால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. கடல் சீற்றத்தால் மீனவர்களும் கடலுக்கு செல்லாததால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் டெல்டா மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருவதால் காரியாபட்டினம் பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் மூழ்கியதால் வயலில் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்து சிறிய கத்தையாக கட்டி நீண்ட கயிறு மூலம் மாலையாக தொடுத்து தண்ணீரிலேயே மேடான பகுதிக்கு விவசாயிகள் இழுத்து சென்றனர். பின்னர் அந்த நெற்கதிர்களை ஒரு நாள் முழுவதும் தண்ணீரை வடிய வைத்து, தார்சாலையில் நெல்லை அடித்து தூற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால், காய வைப்பத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும் தாளடியில் நடப்பட்ட இளம்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே பயிர்களைசூழ்ந்த மழைநீர் வடிந்து வந்தநிலையில் தற்பொழுது மேலும் மழை அதிகரித்துவருவதால் இதுவரை 2 ஆயிரம் எக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளது. மழை நின்ற பிறகுதான் தண்ணீர் வடிய வாய்ப்புள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், மகாராஜபுரம், வேட்டங்குடி, குன்னம், மாதானம், பழையபாளையம், கண்ணபிராண்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 5000 ஏக்கர் சம்பா நடவு மற்றும் நேரடி விதைப்பு பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி, வேளூர், ராயநல்லூர், விளக்குடி உள்ளிட்ட பல ஊராட்சி பகுதிகளில் இரண்டு ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் உட்பட 18 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இதில் இரண்டு கூரை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகியுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நேரடி விதைப்பு, நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கியது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி புரசம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கட்டளைமேட்டு வாய்க்கால் கரை பலவீனம் அடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நான்கு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது ஆற்றின் கரையோரம் இருந்த மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் பலவீனமடைந்த கட்டளைமேட்டு வாய்க்கால் கரையின் ஒரு பகுதி உடைந்து. இதனால் வெளியேறிய நீர் மற்றும் மண் வயலில் புகுந்தது. இதில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நீர் புகுந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாய்க்கால் கரையை ஒட்டி இருந்த வயலில் மண் நெற்பயிர்களை முழுவதும் மூழ்கியதால் அவை முழுவதும் நாசமாகின.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடலுக்குள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக காற்று வீசுவதாலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 650க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கடல்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இதேப்போல கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், பிரதாபிராமன்பட்டினம், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், புதுக்குடி, ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 2745 நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், இப்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காசாகுடிமேடு பகுதி மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், புயல் முன்னெச்சரிக்கையாக நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோரம் உள்ள பைபர் படகுகளை கடற்கரையை விட்டு மேடான பகுதிகளுக்கு டிராக்டர் மூலம் இழுத்து சென்று பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். மீனவர்கள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று வருகின்றனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். காரைக்காலில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்படவிருந்த நிலையில், மழை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகள், திருவாரூரில் பள்ளிகள், மயிலாடுதுறை, தஞ்சை, கரூரில் பள்ளி, கல்லூரிகள், புதுக்கோட்டையில் பள்ளிகள், பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

வெள்ள நீரை அகற்றும் பணி ‘விறுவிறு’

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி, கீழையூர், திருவாய்மூர் முதலியப்பன் கண்டி உள்ளிட்ட  இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் தவிர்க்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில், 250 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. கரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் புகுந்துள்ள மழை நீரை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கள் சார்பில் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 120 பேருக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளிலும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Trichy: Heavy rains again in the delta have submerged several thousand acres of paddy fields. Because fishermen do not go to sea due to sea rage
× RELATED யானை தாக்கி விவசாயி பலி