லக்கிம்பூர் படுகொலை வழக்கில் விவசாயிகள் மீது கொடூரமாக தாக்கியவர்களை உ.பி. அரசும், ஒன்றிய அரசும் பாதுகாக்கிறது!: பிரியங்கா காந்தி சாடல்

டெல்லி: லக்கிம்பூர் படுகொலை வழக்கில் விவசாயிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசு துணை நிற்கிறது என்பது உறுதியாகி இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் டிகோனியா கிராமத்தில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உள்பட 8 பேர் கடந்த 9ம் தேதியன்று கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மீது ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த படுகொலை தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று இரு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், லக்கிம்பூர் படுகொலை வழக்கில் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பான விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரையும், உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் படுகொலை வழக்கில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசு துணை நிற்கிறது என்பதையே உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாக்கிறார் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையில் இருந்து தெளிவாகிறது என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். 

Related Stories: