நமீபியா அணிக்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றி

துபாய்: நமீபியா அணியுடனான சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. டி20 போட்டிகளில் கேப்டனாக கோஹ்லி விளையாடும் கடைசி போட்டி மற்றும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ரவிசாஸ்திரிக்கும் இது கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் தாரக் சின்காவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.

இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ராகுல் சாஹர் இடம் பெற்றார். 2வது பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், இந்திய அணிக்கு இப்போட்டி வெறும் சம்பிரதாயமான ஆட்டமாகவே அமைந்தது. ஜடேஜா மற்றும் அஷ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நமீபியா அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. லிங்கன் 14, ஸ்டீபன் 21, கேப்டன் எராஸ்மஸ் 12, டேவிட் 26 ரன் (25 பந்து, 2 பவுண்டரி) எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

(2 பேர் டக் அவுட்).பிரைலிங்க் 15, ரூபன் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, அஷ்வின் தலா 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து வென்றது. ரோகித் சர்மா 56 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கே.எல்.ராகுல் 54 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். சூர்யகுமார் யாதவ் 25 ரன் எடுத்தார். ஆப்கான், ஸ்காட்லாந்து, நமீபியாவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா, 2வது பிரிவில் 6 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Related Stories: