பிரான்ஸ் இதழ் அறிக்கை ரபேல் ஒப்பந்தத்தை பெற ரூ.650 கோடி கமிஷன்

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற உதவிய இந்திய இடைத்தரகருக்கு பிரான்சின் டசால்ட் நிறுவனம் போலி ரசீதுகள் மூலம் ரூ.650 கோடி கமிஷன் கொடுத்திருப்பதாக பிரான்ஸ் புலனாய்வு இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அவரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் இறுதி செய்தார். அதன்படி, பறக்கும் நிலையில் 36 விமானங்களை ரூ.59,000 கோடியில் வாங்க ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதில் பல்வேறு முறைகேடு நடத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டதை விட பல கோடி கூடுதல் விலை கொடுத்து விமானங்கள் வாங்கப்படுவதாக கூறியது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியாக முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய பாஜ அரசு ஒரு விமானத்தை ரூ.1670 கோடி கொடுத்து வாங்குவதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில், பிரான்சை சேர்ந்த புலனாய்வு செய்தி இதழான மீடியாபார்ட் கடந்த ஏப்ரலில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ‘டசால்ட் நிறுவனம் ரபேல் விமானங்களை இந்தியாவிடம் விற்கும் ஒப்பந்தத்தை பெற ரூ.650 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்த பணம் ஒப்பந்தத்தை பெற உதவி செய்ததற்காக இந்தியாவின் இடைத்தரகர் சுஷன் குப்தா என்பவருக்கு சில போலி நிறுவன ரசீதுகள் மூலமாக ரூ.650 கோடி கமிஷன் கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது’. இந்த முறைகேடு குறித்தும், இது தொடர்பான ஆவணங்களும் 2018ம் ஆண்டிலேயே சிபிஐக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உள்ளது. ஆனால், ஆவணங்களின் உண்மைத் தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

Related Stories: