×

தாய் நாட்டுக்காக விளையாட அதிக முக்கியத்துவம் கொடுங்கள்... கபில் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘இந்திய வீரர்கள் தாய் நாட்டுக்காக விளையாட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் வாரியமும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்’ என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். 1983ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த கபில், நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெளியேறியது குறித்து நேற்று கூறியதாவது: நமது வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தாய் நாட்டுக்காக விளையாடுவதில் அவர்கள் பெருமை கொள்ள வேண்டும். வீரர்களின் பொருளாதார நிலைமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால், என்னால் பெரிதாக எதையும் சொல்ல முடியாது. தனிப்பட்ட அணிகளுக்காக விளையாடுவதை விட... நாட்டுக்காக விளையாட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். அதற்காக, ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. மிக முக்கியமான உலக கோப்பை போன்ற போட்டிகளில் இது போல நமக்கு பின்னடைவு ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பிசிசிஐ-க்கு உள்ளது. இது போன்ற தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதே நாம் இதில் இருந்து கற்க வேண்டிய மிகப் பெரிய பாடமாகும். எதிர்காலத்தில், உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராக சரியான திட்டமிடல் அவசியம். உடனடியாக அதை தொடங்க வேண்டும். இவ்வாறு கபில் கூறியுள்ளார்.

Tags : Kapil , Give more importance to play for the motherland ... Kapil insists
× RELATED மறக்குமா நெஞ்சம்; இதே நாளில் 28...