×

ஜடேஜா, அஷ்வின் சுழலில் மூழ்கியது நமீபியா

துபாய்: இந்திய அணியுடனான சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில், ஜடேஜா மற்றும் அஷ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நமீபியா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. டி20 போட்டிகளில் கேப்டனாக கோஹ்லி விளையாடும் கடைசி போட்டி மற்றும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ரவிசாஸ்திரிக்கும் இது கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் தாரக் சின்காவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.

இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ராகுல் சாஹர் இடம் பெற்றார். 2வது பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், இந்திய அணிக்கு இப்போட்டி வெறும் சம்பிரதாயமான ஆட்டமாகவே அமைந்தது. நமீபியா தொடக்க வீரர்களாக ஸ்டீபன் பார்ட், வான் லிங்கன் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தனர். லிங்கன் 14 ரன் எடுக்க, அடுத்து வந்த வில்லியம்ஸ் டக் அவுட்டானார். ஸ்டீபன் 21 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), ஜான் நிகோல் 5, கேப்டன் எராஸ்மஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் டேவிட் வீஸ் போராட... ஸ்மிட் (9), ஜேன் கிரீன் (0) ஏமாற்றமளித்தனர். டேவிட் 26 ரன் (25 பந்து, 2 பவுண்டரி) எடுத்து பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். நமீபியா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. பிரைலிங்க் 15, ரூபன் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, அஷ்வின் தலா 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.


Tags : Jadeja ,Namibia ,Ashwin , Jadeja, Namibia immersed in Ashwin's whirl
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...